January 21, 2021

Narrthunai Online News

Tamil News Portal

தமிழகம் முழுவதும் அம்மா நகரும் ரேஷன் கடைகளை திறப்பதற்கான அறிவிப்பு !!

தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நகரும் ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அம்மா நகரும் ரேஷன் கடைகள் செயல்படும் நாள், செயல்படும் இடம் ஆகியவற்றிற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும்.

* விநியோகம் செய்யும் இடமானது அரசு கட்டிடம், உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டிடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ஊர் பொது இடமாக இருக்கலாம்.

* நகரும் ரேஷன் கடைகள் இயங்கும் இடத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும். அதில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நாள், குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் பகுதி, கடை செயல்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.

* நகரும் ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நாட்களில் பொருட்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தாய்க்கடையில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாம்.

வாகனம் மூடிய வாகனமாக இருக்க வேண்டும்.

எடைத்தராசு, POS இயந்திரம் உள்ளிட்டவை வாகனத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

* தேவை இருப்பின் பதிவேடுகள் அல்லது படிவங்கள் அனைத்தும் வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும்.

* விநியோகிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் சேதமின்றி கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

* தரமான கட்டுப்பாட்டுப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

* எடைத்தராசின் மின்கலம், POS ஆகியவை போதுமான அளவு சார்ஜ் செய்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரத்தை பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் இணைப் பதிவாளர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாகை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் நகரும் ரேஷன் கடைகள் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.