December 4, 2020

Narrthunai Online News

Tamil News Portal

சென்னை, ராஞ்சி உள்பட 3 இடங்களில் என்ஐஏ கிளை தொடங்க அனுமதி: இந்திய உள்துறை அமைச்சகம்!!

இந்தியாவில் தீவிரவாதம் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை சென்னை (தமிழ்நாடு), ராஞ்சி (ஜார்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தீவிரவாதம், தேசப்பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களில், உடனுக்குடன் செயலாற்றும் என்ஐஏ திறனை இந்த நடவடிக்கை மேம்படுத்தும் என்று அந்தத்துறையின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது என்ஐஏவின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அதன் கிளைகள் குவாஹட்டி, மும்பை, ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னெள, ராய்ப்பூர், சண்டீகர் ஆகிய இடங்களில் உள்ளன.

சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் என்ஐஏ கிளையை அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் புதிய இளைஞர் அணி தலைவரும் எம்.பியுமான தேஜாஸ்வி சூர்யா, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேரில் வலியுறுத்தியிருந்தார்.

அப்போது பெங்களூரை மையமாகக் கொண்டு பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட பயங்கரவாதிகளும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் சதித்திட்டம் தீட்டி வருவதாக வெளிவரும் தகவல்களால், நிரந்தரமாக ஒரு கிளை அலுவலகம் பெங்களூரில் அமைக்கப்பட வேண்டும் என்று தேஜாஸ்வி கோரியிருந்தார்.

இதையடுத்து, அங்கு புதிய கிளையை தொடங்க அதிகாரிகளிடம் பேசுவதாக அமித் ஷா கூறியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜாஸ்வி கூறினார்.

இந்த நிலையில், சென்னையில் என்ஐஏ அலுவலக கிளையை அமைக்கும் அனுமதியை இந்திய உள்துறை வழங்கியிருக்கிறது.

புதிய கிளைக்கு அவசியம் ஏன்?: 

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் என்ஐஏ விசாரிக்கும் வழக்குகளை கொச்சியில் உள்ள கிளை நிர்வகித்து வருகிறது என்று கூறிய அந்த அதிகாரி, புதிய அலுவலக கிளைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரி தலைமை தாங்குவார் என்றும் கடந்த ஆண்டே இதற்கான கோப்புகள் நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் ஒப்புதல் வந்த பிறகே தற்போதைய அனுமதியை இந்திய உள்துறை வழங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரி கூறினார்.

தமிழகத்தில் 8 நேரடி வழக்குகள்:

இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் மொத்தம் 351 வழக்குகள் தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவை எனக்கூறி அவற்றை என்ஐஏ நேரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை இரண்டு வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது.

இதில், இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவுடன் (ஐஎஸ்ஐஎஸ்) தொடர்புடையதாக தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை பின்னர் என்ஐஏ ஏற்றுக் கொண்டது. அந்த வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன், சென்னையை சேர்ந்த ராஜேஷ், சேலத்தை சேர்ந்த அன்பரசன், லியாகத் அலி, பெங்களூரை சேர்ந்த மொஹம்மத் ஹனீஃப், இம்ரான் கான், இஜாஸ் பாஷா, ஹுசேன் ஷரீஃப், கோலாரை சேர்ந்த மொஹம்மத் ஜைத் ஆகிய 10 பேர் மீது என்ஐஏ குற்றம்சாட்டியுள்ளது.

மற்றொன்று, தமிழக காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு. கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி கலியக்காவிளையில் மார்கெட் ரோடு பகுதியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை தாக்கிய நபர்கள் பிறகு கேரளாவுக்குதப்பிச் சென்று மாறுவேடத்தில் மகாராஷ்டிராவில் இருந்ததாகவும் பிறகு அவர்கள் கர்நாடகாவுக்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டதாகவும் என்ஐஏ குற்றம்சாட்டியிருக்கிறது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஜா மொய்தீன், மஹ்பூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி ஆகிய நபர்கள் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி அந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஏற்றது.

புதுச்சேரி முதல்வரை கொல்ல முயற்சி:

புதுச்சேரியில் 2014ஆம் ஆண்டு பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த திருச்செல்வம், கார்த்திக் என்கிற ஆதி, சென்னையைச் சேர்ந்த தங்கராஜ், சிவகங்கையைச் சேர்ந்த கவிராஜன், கலைலிங்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜான் மார்டின் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. தொடக்கத்தில் இந்த வழக்கை புதுச்சேரி காவல்துறையின் குற்றப்புலனாய் சிபிசிஐடி விசாரித்தது. 2014இல் பிரதமர் அலுவலக இணைய அமைச்சராக இருந்தவரும் தற்போது புதுச்சேரி முதல்வராக இருப்பவருமான நாராயணசாமியின் புதுச்சேரி எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கை தீவிரவாத செயலாகக் கருதி என்ஐஏ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

இது தவிர, தமிழ்நாட்டில் மேலும் ஆறு வழக்குகளை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் தொடர்புடைய பலரும் ஐ.எஸ் தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக என்ஐஏ புலனாய்வில் கண்டறிந்ததாக கூறும் வேளையில், நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டில் என்ஐஏ கிளையை நிறுவும் நடவடிக்கையை இந்திய உள்துறை கடந்த ஆண்டு தொடங்கியது.