December 4, 2020

Narrthunai Online News

Tamil News Portal

நரம்பு வலிக்கு என்ன செய்தால் குணமாகும்- அருமருந்து!!

மரங்கள் மனிதர்களுக்கு பயன்படக்கூடியவை என்றாலும் சில மரங்களை தள்ளி வைத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று எட்டிமரம்.

எட்டி காய்த்தென்ன, ஈயாதோர் வாழ்ந்தென்ன என்று எட்டி மரம் குறித்த பழமொழி உண்டு. உண்மைதான் விஷத்தன்மை கொண்ட எட்டி மரத்தின் காய்களிடமிருந்து எட்டியே இருக்க வேண்டும் என்பதற்காகவே இதற்கு எட்டி மரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்படியெனில் இவை என்ன நன்மை செய்கிறது என்று கேட்கலாம். அதைத்தான் பார்க்க போகிறோம்.

இது விஷத்தன்மை கொண்டது என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு விஷங்களை முறிக்கும் மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. தாவரங்களில் இயற்கையாக இருக்கும். வேதிப்பொருளான அல்கலாய்டுகள் எட்டி மரத்தின் விதை, பட்டை, இலை, கனி, வேர் அனைத்திலும் உள்ளது. இவை மருத்துவ குணமாக பயன்படுத்தப்படுகிறது. எல்லா காலங்களிலும் இவை பசுமையாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோமியோபதி மருத்துவத்தில் வயிறு வலி, வாந்தி, அடிவயிறு வலி, குடல் புண், மன அழுத்தம், தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு கொடுக்கும் மருந்து நக்ஸ் வாமிகா ஆகும். இதை நச்சு முறிவுக்கும் கொடுப்பார்கள். இந்த மருந்து எட்டி மரத்தில் உள்ள அல்கலாய்டுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதில் முக்கியமானவை ஸ்டிரிக்னைன், புரூசைன் போன்றவை தான்.

மத்திய அரசு சோதனை கூடத்தில் எட்டி மரத்தின் விதைகளிலிருந்து இந்த வேதிப்பொருள்கள் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.இந்த அல்கலாய்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருந்து பயோ முறையில் மருந்தாக்கி மீண்டும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடலில் ஆயிரக்கணக்கில் நரம்புகள் உண்டு. உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடும் மூளைக்கு தகவல் சொல்லும் வேலை நரம்பினுடையது தான். இந்த நரம்பு சேதமடையும் போது நரம்பு திசுக்களில் காயம் ஏற்படும் போது நரம்பு வலி உண்டாக கூடும். இந்த வலி உபாதை அதிகமாக இருக்கும். இவை எந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோ அந்த இடத்தை பொறுத்து வலி வரும் இடமும் மாறுபடும். வலியின் தீவிரமும் மாறுபடும்.

நரம்பு வலி முதுகை தொடர்ந்து தொடை வரை நீண்டு படிப்படியாக பின்னங்கால் வரை இருகும். இந்த வலிக்கு நிவாரணமாக மாத்திரைகளும், சிகிச்சையும் தொடர்ந்தாலும் உடன் பலனும் வேகமாக கிடைக்க எட்டி மர இலையை பயன்படுத்தலாம்.

தினமும் குளிப்பதற்கு முன்பு எட்டி இலை சேர்த்து கொதிக்கவைத்த நீரில் குளித்து வந்தால், நரம்பு வலி குணமாகும். வலி நிவாரணம் குறையும் வரை இந்த எட்டி இலையை சேர்த்து குளித்துவரலாம். பாதிப்பில்லாதது. எட்டி மரத்தின் விதைகளில் களிம்புகள் தயாரிக்கப்பட்டு முடக்குவாத நோய்க்கு மருந்தாகிறது.

உஷ்ணத்தினால் உண்டாகும் கொப்புளங்கள், உடலில் புண்களால் கட்டிகள் ஏற்படும் போது எட்டி மரத்தின் இளந்தளிரை அரைத்து அதனுடன் பசு வெண்ணெய் கலந்து கட்டிகள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் கட்டிகள் உடைந்து குணமாகும். எட்டி மரத்தின் பட்டையை நெய்யில் காய்ச்சி குழைத்து புண், கட்டிகள் மீது தடவ வேண்டும். சொறி, சிரங்கு பிரச்சனைகளால் சருமம் பாதிக்கப்படும் போதும் இதை பயன்படுத்தலாம்.

எட்டி மர இளந்தளிரை நெருப்பில் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் சேர்த்தும் குழைத்தும் கட்டிகள் மீது தடவி வந்தால் கட்டி அமுங்கும். எட்டி பழச்சாறை சீழ் மிகுந்த கட்டியின் மீது தடவி வந்தால் சீழ் வெளியேறும்.

எட்டிப்பழத்தை இலேசாக வதக்கி இதன் ஓடுகளையும், கொட்டைகளையும் நீக்கி உள்ளிருக்கும் சதைபகுதி எடுத்து ஒரு துணியில் கட்டி சாறு பிழியவும்.காலரா நோயால் பாதிக்கப்பட்டால் எட்டி மரத்தின் வேர்ப்பட்டையுடன் எலுமிச்சை சாறு கலந்து மாத்திரையாக தரப்படுகிறது. இந்த சாறை கொண்டு தயாரிக்கப்படும் செந்தூரம், மாத்திரை, பஸ்பங்கள் போன்றவை தொழு நோயாளிக்கு அளிக்கப்படுகிறது. சித்த வைத்தியத்தில் எட்டி மரத்திலிருந்து எட்டித் தைலம் தயாரிக்கப்படுகிறது.

எட்டி இலை, வேர்,பட்டை எல்லாமே நச்சுத்தன்மை கொண்டிருந்தாலும் இதை குறைந்த அளவு சேர்த்து முட்டு வலி, நரம்பு மண்டல நோய், நாய்க்கடி, தூக்கமின்மை முடக்குவாத, வாந்தி, வலிப்பு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

எட்டிக்கொட்டையை பொடியாக்கி நீரில் கலந்து எடுத்துகொண்டால் நரம்பு நோய்கள் நீங்கும். ஆனால் மிக கவனமாக இதை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் இவை நச்சை உண்டாக்கிவிடும். எட்டி விதை தூளி, எட்டி கற்பம், எட்டி தைலம் என பலவிதமான மருந்துகள் தயாரிக்கப்பட்டாலும் இதை வீட்டில் தயாரிப்பதோ சுயமாக மருந்து வாங்கி எடுத்து கொள்வதோ மிகவும் ஆபத்தானது. வெளிப்பூச்சுக்கு பயன்படுத்தலாம் உள்ளுக்கு எடுக்கும் போது மருத்துவரின் அறிவுரையும் ஆலோசனையும் அவசியம்.