December 4, 2020

Narrthunai Online News

Tamil News Portal

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்..டிரம்ப்- பைடன்!! கடும் போட்டி !!

வாஷிங்டன்:

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி, ஏற்கனவே 9.2 கோடி பேர் ஓட்டு போட்டுள்ள நிலையில், அடுத்த அதிபராக மகுடம் சூடுவதில் டொனால்ட் டிரம்ப் – ஜோ பிடென் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை அறிவிக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் அதிகாரமிக்க பதவியான அமெரிக்காவின் அதிபராக அடுத்து யார் பதவி வகிக்கப் போகிறார் என்பதை அனைத்து நாடுகளுமே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும் (74), ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடெனும் (77) போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடந்தாலும் முன்னெப்போதையும் விட அமெரிக்கர்கள் இம்முறை வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய முன்கூட்டிய வாக்குப்பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி இதுவரை 9.2 கோடி மக்கள்  தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். அதிபர் டிரம்ப் புளோரிடாவில் சொந்த ஊரில் தனது வாக்கை செலுத்தி விட்டார். தபால் ஓட்டு மூலமாகவும் மக்கள் தங்களை வாக்கை செலுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 15 கோடி அல்லது 16 கோடி வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நேரடி வாக்குப்பதிவில் சுமார் 5 அல்லது 6 கோடி பேர் வாக்களிக்க வாய்ப்புள்ளது.

அதிபர் டிரம்ப்பை பொறுத்த வரையில், 4 ஆண்டு கால ஆட்சியில் சாதனைகளை விட சோதனைகளே அதிகம் உள்ளன. குறிப்பாக அவரது தலைமையிலான அரசு கொரோனாவை கையாண்ட விதம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வல்லரசான அமெரிக்காவில் பல நவீன மருத்துவ வசதிகள் இருந்த போதிலம், உலகிலேயே அதிக பாதிப்பையும், பலியையும் சந்தித்துள்ளது. இது பொருளாதாரத்திலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி எப்போதும் அமெரிக்கர்களையே முன்வைத்து பேசும் டிரம்ப், கறுப்பினத்தவர்களுக்கு எதிரானவராகவே இருந்துள்ளார். குறிப்பாக, ஜார்ஜ் பிளாய்ட்  போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் கறுப்பினத்தவர்கள் மத்தியில் டிரம்ப் மீது ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதனால் கறுப்பினத்தவர்களில் பெரும்பாலான ஓட்டுகள் பிடெனுக்கு விழுவதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஈரானுடன் போர் சூழல் உருவாக்கியது, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது, ஈராக்குடன் அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது என பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். சீனாவுடன் வர்த்தக போர் நடத்தி அந்நாட்டை நிரந்தர எதிரியாக மாற்றி இருக்கிறார். அதே சமயம், மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் சவுதி உள்ளிட்ட நாடுகளை சமரசப்படுத்தி அமைதியை நிலைநாட்ட எடுத்த டிரம்ப் எடுத்த சில முடிவுகள் சர்வதேச அளவில் பாராட்டை பெற்றன. அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அந்நாட்டு மக்கள் மத்தியில் ஹீரோவாகவும் டிரம்ப் போற்றப்படுகிறார். இதெல்லாம் டிரம்ப்பின் சாதக, பாதகங்களாக உள்ளன. இந்த விஷயங்களே அதிபர் தேர்தலில் முடிவை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.

பிடெனை பொறுத்த வரையில், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. டிரம்ப் அரசின் ஒவ்வொரு தோல்வியையும் தனது அனல்பறக்கும் பிரசாரத்தில் தோலுரித்துக் காட்டிய அவர், அதற்கான தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளார். இதனால் அமெரிக்கர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். பிடென் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற வரலாற்று சாதனையை கமலா நிகழ்த்துவார். எனவே இத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரும் பெரும்பாலும் பிடெனுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், அதிரடி நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரரான டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக மகுடம் சூடப் போகிறாரா அல்லது பிடென் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா என்பது இன்றைய வாக்குப்பதிவில் தெரிந்து விடும். வாக்குப்பதிவு முடிவுகள் அமெரிக்க நேரப்படி 4ம் தேதி அதிகாலையில் தெரியவரும் என கூறப்படுகிறது.

இறுதி கணிப்புகள் பிடென் முன்னிலை:

இறுதிகட்ட கருத்துக்கணிப்புகள் பிடெனுக்கு ஆதரவாகவே உள்ளன. ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பிடெனுக்கு 51 சதவீதமும், டிரம்ப்புக்கு 42 சதவீதமும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் கருத்துக்கணிப்பில் விஸ்கான்சின், பென்சில்வேனியா, புளோரிடா, அரிசோனா ஆகிய 4 முக்கிய மாகாணங்களில் பிடெனுக்கு அமோக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பிடெனுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. முன்கூட்டிய வாக்குப்பதிவிலும் பிடெனுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

முடிவு அறிவிக்க தாமதமாகலாம்:

* இன்று பதிவாகும் வாக்குகள் முதலில் எண்ணப்படும். பிறகு தபால் ஓட்டுகள் மற்றும் முன்கூட்டிய தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்படும். இதுவரை அமெரிக்க தேர்தல் வரலாற்றில் பதிவாகாத அளவுக்கு சுமார் 9.2 கோடி முன்கூட்டிய வாக்குகள் பதிவாகி இருப்பதால், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
* ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய் கிழமை அதிபர் தேர்தல் நடத்தப்படும்.
* முன்கூட்டியே வாக்களித்த 9.2 கோடி பேரில் 3.3 கோடி பேர் வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களித்தனர். 5.8 கோடி பேர் தபால் ஓட்டு போட்டவர்கள்.
* டிரம்ப், பிடெனை தவிர்த்து அமெரிக்க அதிபர் களத்தில் 1,214 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் மட்டுமே சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர். அதன்பின் குடியரசு, ஜனநாயக கட்சி இரண்டில் ஒரு வேட்பாளரே வெற்றி பெறுகிறார்.

தாமதமானால் வழக்கு தொடருவேன்:

தபால் ஓட்டுப்பதிவை ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஓட்டெடுப்பு முடிந்ததும், டிரம்ப் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தனக்கு தானே அதிபராக அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. இதை மறுத்துள்ள டிரம்ப், ‘‘அப்படிப்பட்ட செயல்கள் நிச்சயம் நடக்காது. ஆனாலும், தபால் ஓட்டுகளில் குளறுபடியோ அல்லது முடிவை அறிவிப்பதில் தாமதமோ ஏற்பட்டால் சும்மா விடமாட்டேன். நிச்சயம் அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்’’ என எச்சரித்துள்ளார். பிடெனை பற்றி கூறுகையில், ‘‘அவர் அதிபரானால் நாடே சிறைச்சாலை ஆகிவிடும். நாட்டை பாழாக்கும் இடதுசாரிகள், கொள்ளையர்கள் சுதந்திரமாக திரிய ஆரம்பிப்பார்கள்’’ என்றும் மக்கள் மத்தியில் பயத்தை மூட்டி உள்ளார்.

டிரம்ப் ஒரு ‘வைரஸ்’:

வாக்குப்பதிவையொட்டி, நேற்று இறுதிகட்ட பிரசாரங்கள் அனல்பறந்தன. டிரம்ப், வடக்கு கரோலினா முதல் விஸ்கான்சின் வரை இறுதி நாளில் 5 பேரணிகளில் பங்கேற்றார். பிடென் பென்சில்வேனியா, ஒஹியோவில் பிரசாரங்கள் மேற்கொண்டார். டிரம்ப்பை வீழ்த்த பென்சில்வேனியாவில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதால் பிடென் அங்கு தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘‘டிரம்ப் ஒரு வைரஸ். அவரை நாட்டை விட்டே விரட்ட வேண்டிய நேரம் இது (தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என டிரம்ப் கூறியதை சூசகமாக கூறினார்). அமெரிக்கர்கள் அனைவரும் அதை விரும்புவதை நான் அறிவேன்’’ என்றார்.

அதிபரை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது:

அமெரிக்க தேர்தல் நடைமுறையை பொறுத்த வரையில் அதிபரை மக்கள் நேரடியாக நேர்த்தெடுக்க மாட்டார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்கள் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். தற்போது மொத்தம் 538 பிரதிநிதிகள் குழு உறுப்பினர் இருக்கிறார்கள். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி அடைய முடியும். எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். உதாரணமாக, ஒரு மாகாணத்தில் வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும், அந்த மாகாணத்துக்கான மொத்த பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களின் வாக்குகள் அனைத்தும் வெற்றியாளருக்கே போய் சேரும்.

எனவே பெரிய மாகாணங்களில் யார் வெல்கிறார்களோ அவரே அதிபராக முடியும். மேலும், மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அதிபராக முடியும். இதன்படிதான், கடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் இதே போன்ற ராசி டிரம்ப்புக்கு உதவினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

எனக்கு பிடிச்சது இட்லி-சாம்பார்:

துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், ‘‘தென் இந்திய உணவுகளைப் பொறுத்த வரை இட்லி-சாம்பார் தான் என்னோட ஃபேவரட். வடஇந்திய உணவுகளில் டிக்கா பிடிக்கும்’’ என இந்தியர்கள் ஓட்டை கவரும் வகையில் பதிலளித்துள்ளார்.

முடிவை நிர்ணயிக்கும் 6 மாகாணங்கள்:

அமெரிக்காவில் ஆறு மாகாணங்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க கூடியவையாக உள்ளன. அரிசோனா, புளோரிடா, மிட்சிகன், வடக்கு கரோலினா, பெனிசில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவைதான் அந்த மாகாணங்கள். இங்கு சிலவற்றில் சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே கடந்த முறை அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.