December 4, 2020

Narrthunai Online News

Tamil News Portal

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியும்,ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவனுமான ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டு சிறை!!

லாகூர்:

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியும், ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவனுமான ஹபீஸ் சயீதுக்கு, பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட மேலும் இரண்டு வழக்குகளில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்தியில், பயங்கரவாத செயல்களுக்கு சட்டவிரோதமாக நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட மேலும் இரண்டு வழக்குகளில், ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 4 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில், ஹபீஸ் சயீத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜாபர் இக்பால், யாஹ்யா முஜாகித் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ஹபீசின் உறவினரான அப்துல் ரெஹ்மான் மக்கிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்., மாதம், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹபீஸ் சயீத் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் 166 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டான். அவனை கைது செய்து ஒப்படைக்கும்படி இந்தியா கூறியது. ஐ.நா., மற்றும் அமெரிக்காவாலும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான். சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்.